எல்லோரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வரும் இந்த நேரத்தில், என்னுடைய கருத்தையும் பதிவு செய்வது என்று தீர்மானித்து வெகு நாட்களுக்குப் பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். இதில் மாற்று கருத்து உள்ளவர்கள், தங்கள் கருத்தை மிக நாகரிகமாக முன் வைத்தால், நல்ல விவாதங்களுக்கு நான் தயார்.
சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன். பின்பு காரணங்களாக நான் கருதுவதை விளக்குகிறேன்.
1. தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து வர வாய்ப்பு இருப்பதாக யூகிக்கிறேன்.
2. அப்படி வந்தால், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் தி மு க உறுப்பினர் அல்ல.
3. மத்தியில் பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் பா ஜ க உறுப்பினரும் அல்ல. ஆனால் தமிழ் நாட்டில் பா ஜ க ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை. நானே ஓட்டு போட மாட்டேன்.
4. மத்தியில் உருவாகும் பா ஜ க ஆட்சியில் ஒரு தமிழக கட்சியும் கூட்டணியில் இருக்க வேண்டும். தி மு க அப்படி இருக்குமா என்றால், அது நடக்கும் என்று தோன்ற வில்லை. ஆனால் அரசியலில் எல்லாமே சாத்தியம், சாதாரணம்.
என்னுடைய காரணங்கள் கீழே.
மத்திய அரசு நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை முன் வைக்கிறது. இது உடனே சாத்தியம் இல்லா விட்டாலும், மத்திய அரசு முடிந்த வரை, பல மாநில தேர்தல்களை சேர்த்து நடத்த விரும்பும். அதனால் தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தும் சூழலை மத்திய அரசால் கொண்டு வர முடியும். எப்படி என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
இன்றைய தேதியில், திமுக தனி பெரும் கட்சியாக இருக்கிறது. கலைஞர் மறைவு ஒரு அனுதாப அலையை உருவாக்க வாய்ப்பு உண்டு. திமுக போல் அதிமுக சரியான அடுத்த தலைவரை உருவாக்க வில்லை. ஸ்டாலினின் கடந்த கால அனுபவங்கள் அவரை மிக தகுதியான நபராக காட்டுகிறது. அனுபவ ரீதியில், அவர் முதல் தகுதியான நபராக இருக்கிறார். ஓபிஎஸ் முதல்வராக பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், அவர் ஒரு இடைக்கால முதல்வராகவே இருந்த்தார் அதுவும் மற்றவர்களின் ஆணைக்கும் வழிகாட்டுதலுக்கும் இணங்கியே அரசை நடத்தினார். இன்றைய உட்கட்சி பூசல்களினாலும், அங்கு ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் எவரும் இல்லை.
மேயர் மற்றும் துணை முதல்வர் பதவியில் இருந்த ஸ்டாலின் சென்னை மாநகர் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்தவர்.
அதனால் திமுக வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் திமுக தனி பெரும்பான்மை பெறாமல், மற்றொரு கட்சியின் கூட்டணியில் ஆட்சியை பிடிக்க வேண்டும். அது மக்கள் நீதி மையமாக கூட இருக்கலாம். கமலஹாசன் இந்த இடத்தை பிடிக்க முயன்றால் அது அவருக்கு பெரும் வெற்றி. மாறாக முதல் தேர்தலில் அவர் முதல்வராக ஆசைப் பட்டால் அது நடக்காது என்றே தோன்றுகிறது. திமுக அல்லது அதிமுக தவிர வேறு கட்சி ஆட்சியை பிடிக்க கூடாதா என்று கேட்டால், அது வரும் மாநில தேர்தலில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. டெல்லியில் கெஜ்ரிவால் வர முடிந்ததை உதாரணமாக எடுத்து கொண்டால், அங்கு தொகுதிகள் குறைவு. அதனால் அங்கு ஒரு தாக்கத்தை ஆம் ஆத்மீ கட்சியால் ஒரே தேர்தலில் கொடுக்க முடிந்தது.தமிழ்நாட்டில் அதற்கு குறைந்தது 2 மாநில தேர்தலை சந்திக்க வேண்டும். தேமுதிகவிற்கு அந்த வாய்ப்பு இருந்தது, ஆனால் சரியான திட்டமிடல் இல்லாததனாலும் விஜயகாந்த் அவர்களின் உடல் நிலையினாலும் அது சாத்தியப்படவில்லை. கமல்ஹாசன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று யாருக்கும் தெரியாது. கட்சி ஆரம்பித்தாலும் எந்த தேர்தலில் நிற்பார் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை பொருத்தே கூற முடியும். நிச்சயமாக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அவர் அரசியல் வருகை பெருந்துயராகவே முடியும்.
ஸ்டாலின் வந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா, ஊழல் அற்ற ஆட்சியை கொடுப்பாரா என்று கேட்டால், ஊழல் அற்ற ஆட்சியை யாராலும் தர முடியாது என்பதே நிதர்சனம். குறைந்தது ஒரு செயல்படும் அரசையாவது எதிர்பார்க்கலாம். உள்ளவற்றில் நல்லதை மக்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். ஏதாவது ஒரு சாணக்கியர் மூன்றாம் அணி உருவாக்கி, வாக்குகளை பிரிக்கப் பார்த்தால், அது ஒரு வேலை திமுக வெற்றியை பாதிக்கலாம். ஆனால் அது ஒரு தொங்கு சட்ட மன்றத்தை கொண்டு வந்து தமிழ்நாட்டை பாதிக்கும். ஆனால் அந்த சாணக்கியர் இப்போது ஸ்டாலின் அணியில் இருக்கிறார்!
அடுத்தது, பாஜக எப்படி மத்தியில் வர முடியும்? ஏனென்றால் காங்கிரஸ் கடந்த நாலரை ஆண்டுகளில் கட்சியை வளர்க்க தவறியது. தகுதி வாய்ந்த அரசியல் தலைவர்களை முன்னிறுத்தி தேர்தல்களை சந்திக்க வில்லை. தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா தவிர, மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாகவோ அல்லது ஒரு வலுவான கூட்டணியோடோ இருக்கிறது. தமிழ்நாட்டை தவிர, மற்ற எல்லா மாநிலங்களிலும் அவ்வளவு பாஜக எதிர்ப்பு இருப்பதாக தோன்ற வில்லை. ஆனால் பாஜக 2014 போல் அவ்வளவு பெரும்பான்மையை பெறுவது கடினம். தேசிய அளவில், ஒரு மூன்றாம் கூட்டணியோ அல்லது காங்கிரஸ் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிக்கக்கூடும். ஆனால் அப்படி ஒரு வலுவான கூட்டணி அமைவது கடினம்.
2014 தேர்தலில், நான் பாஜக வர விரும்பி இருந்தாலும்,அரசின் செயல்பாடுகளில் என்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாம் நடக்க வில்லை. சில விஷயங்களில் நேர் மறை நிகழ்வுகளே நடந்துள்ளன. ஆனாலும், காங்கிரஸ் அல்லது வேறொரு தேசிய கூட்டணி பாஜகவை வீழ்த்துவது கடினம். பெரும்பான்மை கிடைக்கா விட்டாலும், தனி பெரும் காட்சியாகவாவது பாஜக இருக்கும்.
முதலில் பாஜக அரசிடம் என்னுடைய ஏமாற்றங்களை பார்ப்போம்
1. மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை அரசில் சேர்த்து அவர்களுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்தது. ஸ்ம்ரிதி இராணி மற்றும் அருண் ஜெட்லீ போன்றவர்கள் அரசில் இடம் பெற்றது நல்ல உதாரணம் அல்ல. மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் அரசில் இடம் பெறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர்களை தேர்தலில் நிறுத்தாமல் ராஜ்யசபை மூலம் கொண்டு வைத்து இருந்தால் கூட வருத்தமாக இருந்திருக்காது.
2. பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியாக செயல் படுத்தாதது. 500 மற்றும் 1000 நோட்டுகளை நீக்கி விட்டு 2000 நோட்டை அறிமுகப் படுத்திய போதே என் நம்பிக்கை சுக்கு நூறானது.
3.கோவா போல சில மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய விதம் துளியும் சரியானது அல்ல.
4. மத அடிப்படைவாதிகளை அடக்க முடியாமல் தவிப்பது. சில சமயங்களில் பாஜக எம்பி அல்லது எம்.எல்.ஏ க்களே கடுமையான மத ரீதியான கருத்துகளை முன் வைத்து சூடு பட்டுக் கொள்வது. மொழி, மத, இன மற்றும் உணவு அடிப்படையில் குழப்பம் விளைவிப்பவர்களை கண்டிக்காமல் இருப்பது.
5. ஆதார் நடை முறை படுத்துவதில் குளறுபடிகள்.
6. பாஜக தமிழ்நாடு அரசியலை கையாளும் விதம். குறிப்பாக ஹிந்தி திணிக்கப்படும் விதம். என்னைப் பொருத்த மட்டில், தமிழ்நாட்டில் ஹிந்தியை விருப்ப பாடமாக கொடுத்தாலே 90% மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். மைல் கற்களிலும், ரயில்வே டிக்கெட்களிலும் , பெயர் பலகைகளில் பின்பு பார்த்துக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசைக் காப்பாற்றி அதன் மூலம் பாஜக நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பது. தமிழ்நாட்டிற்கு தரப்பட வேண்டிய சரியான அளவு பொருளாதார ஒதுக்கீட்டை முன்பு போல அளிக்காதது.
7. தமிழ்நாடு பாஜக தலைவர்கள். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைவர்கள் இல்லா விட்டாலும், மக்களை ஆத்திரப்படுத்தாத தலைவர்களாவது வேண்டும்.
8. காங்கிரஸ் பிரச்சனைகளை நாடு முழுவதும் தோண்டி எடுத்து ஆர்ப்பாட்டங்களை பரப்பும் பொது, அதனை சரியாக எதிர் கொள்ள முடியாமல் போவது. பாஜக அரசு என்று அறியப்படாமல் அனைவரும் மோடி அரசு என்றே பேசுவது.
9. அதீத வாக்குறுதிகளை அள்ளி இறைத்து 2014 தேர்தலில் வெற்றி பெற்று விட்டு அதனில் கணிசமான அளவு கூட செய்ய முடியாமல் திணறுவது. முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் உணரும் வகையில் எந்த நிதி நிர்வாக சீர்திருத்தங்களை இல்லாதது. வேலை வாய்ப்பு உருவாக்குவதில் தேக்கம். மேக் இன் இந்தியா திட்டம் அந்த அளவுக்கு மாற்றத்தை கொண்டு வராதது. கருப்பு பண மீட்பு விஷயத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் இல்லாதது.
10. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் உணராத மாற்றங்களை / பலன்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெறுவது. பெட்ரோல் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தாமல் விட்டிருப்பது, அதே சமயத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் எளிதில் கிடைக்கப் பாடு படுவது.
இவற்றை எல்லாம் தாண்டி ஏன் பாஜக வரும் அல்லது வர வேண்டும் என்று விழைகிறேன்
1. காங்கிரஸ் அவ்வளவு பலமாக இல்லாதது. ஒரு வலுவான தலைமை இல்லாமல் காங்கிரஸ் திணறுகிறது. வலுவான மூன்றாவது அணி உருவாக சாத்தியம் இல்லாத சூழ்நிலை.
2. தீவிரவாத தாக்குதல்கள் குறைந்து இருப்பது.
3. குறைந்தது GST அமுலுக்கு கொண்டு வர முடிந்தது.
4. சில நிர்வாக சீர்திருத்தங்கள் மேற் கொண்டது. பழைய வேண்டாத சட்டங்களை ஒழித்தது உட்பட.
5. ரஃபேல் தவிர பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாதது. அதுவும் எப்படி நிரூபிக்க முடியும் என்று தெரிய வில்லை. 2G வழக்கே நிற்க முடியாமல் போனது. இது எம்மாத்திரம்.
6. உலக நாடுகளுடன் அதிக உத்வேகத்துடன் வெளி உறவுக்கொள்கைகளை மேம்படுத்துவது.
7. ஆயுஷ்மான் பாரத் திட்டம் எவ்வளவு பேருக்கு பயன் அளிக்கப் போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். முதல் பார்வையில், இது நல்ல திட்டமாக தோன்றுகிறது.
8. ரயில்வேயில் சிறிது சுத்தமாக பராமரிப்பது. இன்னும் நாம் 50 ஆண்டுகள் பின் தங்கி இருந்தாலும், ஒரு சிறிய மாற்றம் சுரேஷ் பிரபு போன்றவர்கள் மூலமாக பார்க்க முடிகிறது.
9.பல செயல்படும் அமைச்சர்களை கொண்டு உள்ளது. சில நல்லதோ கெட்டதோ முன்பை விட விரைவாக நடை முறைப் படுத்த படுவது. சில தவறான முடிவுகளை அல்லது திட்டத்தின் பலன்களை பொறுத்து விரைவாக விதிகளை மாற்றம் செய்ய முன் வருவது. அனைத்து நல்ல முயற்சிகளும் பலன் தர வேண்டும் என்றால், அடுத்து 5 ஆண்டுகளாவது பாஜக ஆட்சி தேவை. பாஜகவும் பல மக்களை திருப்தி படுத்தும் திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.
10. பல கடினமான முடிவுகளை எடுக்க முற்படுவது.
பல பேர் என்னை மோடி பக்தனாக பார்க்கக் கூடும். மோடி ஒரு முக்கிய தலைவர், கடுமையாக உழைப்பவர். ஆனால் அவராலும் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் நிறைய உள்ளன. அவரையே முன்னிறுத்தி தேர்தல்களை சந்திப்பது நிறைய நாட்களுக்கு பலன் தராது. 2019ல் மோடி தேர்ந்தெடுக்கப் பட்டாலும், அடுத்த தலைவரை அடையாளம் காண்பது மிக முக்கியம். தேவைப்பட்டால், கூட்டணி கட்சிகள் ஆதரிக்காத நிலையில் பாஜக அடுத்த தகுதியான பிரதமரை 2019லே கொண்டு வர தயங்கக் கூடாது.
எல்லாவற்றையும் மீறி பாஜகவிற்கு எதிராக ஒரு மஹா யுத்தம் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களிலும் நடத்தப் பட்டு வருகிறது. பாஜக மீது தவறுகள் இருக்கலாம். ஆனால் உற்று யோசித்தால் எல்லா பழைய பிரச்சனைகளும் தூசி தட்டப் பட்டு, அவைகள் பாஜக ஆட்சியின் தவறுகள் போல சித்தரிக்கப் பட்டு வருகின்றன. ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரண்டு பக்கமும் இதனை செய்து வருகின்றன. அதனால் எல்லா ஊடக செய்திகளையும் பார்த்து, படித்து, நடுநிலை மக்களிடம் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வர வேண்டும். சமூக வலைத்தளங்களில் பணம் கொடுத்து கருத்த்துக்களை திணிக்க முடியும் என்பதை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா விவகாரத்தில் எல்லோராலும் உணர்ந்து இருக்க முடியும்.
அடுத்த ஆசை, ஒரு தமிழக கட்சி மத்திய ஆட்சியில் அங்கமாக இருப்பது. கலைஞரிடம் பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்தியில் எப்படியாவது ஆட்சியில் இருப்பார். அது வாஜ்பாய் ஆக இருந்தாலும் சரி, மன்மோகனாக இருந்தாலும் சரி. திமுக ஆட்சியில் அங்கம் வகிக்கும். அது பல முன்னேற்றங்களை தமிழ்நாட்டுக்கு தந்தது. ஆனால் ஜெயலலிதா அதை தவற விட்டார். ஆனால் இம்முறை திமுக அப்படி ஒரு சூழ்நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே. ஏதோ ஒன்று திமுகவையும் காங்கிரசையும் கட்டிப் போட்டு உள்ளது. அது பகவானுக்கே வெளிச்சம்..
இவை எல்லாம் அபிலாஷைகளே. ஆனால் இந்த அரசியல் பல விசித்திரமான முடிவுகளை உலகுக்கு தந்து உள்ளது. பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்றைய பாடல் வரிகள் - தேர்தலில் ஒவ்வொரு முறையும் வாக்களித்து தோற்றுப் போகும் வாக்காளர்களுக்காக. கட்சி பார்க்காமல் தகுதியான வேட்பாளர்களை பார்த்து உங்கள் ஓட்டுக்களை அளிக்கவும். ஜன நாயகம் அதுவாக நல்ல அரசைக் கொண்டு வரும்.
தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமை என நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?
Comments