எத்தனை பேருக்க்கு நினைவிருக்கும் தெரியவில்லை. சில குழந்தை பருவ விளையாட்டுகள் இப்போது காணாமல் போய் விட்டன. நமக்கே சிலன மறந்து போய் விட்டன. இந்த பதிவு அந்த தொலைந்து போன, தொலைந்து கொண்டு இருக்கின்ற விளையாட்டுகளை பதிவதற்காக.
1. செதுக்கு: இந்த விளையாட்டில் ஒரு வட்டம் தரையில் வரைந்து அதற்குள் அவரவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை போட வேண்டும். ஆளுக்கு 10 அல்லது 20 என எல்லோரும் சமமாக போட்டு, அதனை தட்டையான கல்லை வைத்து செதுக்கி வட்டத்துக்கு வெளியே எடுக்க வேண்டும். அந்த கொட்டைகள் செதுக்கி எடுப்பவருக்கு சொந்தம். ஒரு செதுக்கில் ஒரு கொட்டை கூட எடுக்க வில்லையெனில் ஆட்டம் அடுத்தவருக்கு போகும். இப்படி ஒருவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை இழந்து வீடு திரும்புவதும் உண்டு, ஜாக்பாட் அடித்து அடுத்தவர் சேமிப்பை வழித்து எடுத்து கொண்டு போவதும் உண்டு. இதுவே பின்னாளில் சிகரெட் அட்டைகளை கொண்டு விளையாடினர். சிசர்ஸ் அட்டைக்கு 10 பாயிண்ட், கோல்ட் ப்லக் 20 பாயிண்ட். சார்மினார் 100 பாயிண்ட். எப்படி தொண்ணூறுகளுக்கு பிறகு குழந்தைகள் WWF கார்டுகளை சேர்க்க ஆரம்பித்தார்களோ, அதற்கு முன் சிகரெட் அட்டை சேர்ப்பது ஒரு வெறி. திடீரென்று ஒருவன் எங்கேயோ எப்படியோ முயன்று 555 சிகரெட் அட்டை எடுத்து வந்து அதற்கு 10000 பாயிண்ட் என்பான். இந்த விளையாட்டில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
2. ஒன்பது குழி: இது ஒரு சர்வ தேச விளையாட்டாய் ஆகி இருக்க வேண்டும். ஏன் ரொம்ப பிரபலம் ஆக வில்லையென தெரிய வில்லை. மண்ணில் ஒன்பது சின்ன குழிகளை 3X 3 மாட்ரிக்ஸ் மாதிரி போட வேண்டும். குறிப்பாக ஒரு சுவருக்கு அருகில் போட வேண்டும். இந்த ஆட்டத்தில் மொத்தம் 7 கோலி குண்டுகள். முதலில் ஆடுபவர் சிறிது தூரத்தில் இருந்து 6 குண்டுகளை உருட்டி இந்த ஒன்பது குழிகளுக்குள் வீசுவார். அவை வெவ்வேறு குழிகளில் விழும். பிறகு எதிராளி ஒரு குறிப்பிட்ட கோலியை அடிக்க சொல்வார். பிறகு இந்த முதல் வீரர் ஏழாவது குண்டைக் கொண்டு அந்த குறிப்பிட்ட குண்டை அடிக்க வேண்டும். அடிக்கும் பொழுது அது மற்ற குண்டுகள் மீது படக் கூடாது. அந்த குண்டை அடிப்பதற்கு பல் வேறு யுக்திகளை மேற்கொள்வர். சுவற்றில் அடித்து ரிவர்சில் அடிப்பது, பக்க வாட்டில் உருட்டி சறுக்கி விழ வைப்பது, புல் டாசில் வீசுவது என ஒவ்வொரு பொசிசனுக்கும் ஒரு டெக்னிக் உண்டு. இது காசு வைத்து ஆடும் விளையாட்டு. 25 பைசா அல்லது 50 பைசா என பெட்டிங் உண்டு. சரியாக அடித்தால் காசு நிச்சயம், இல்லை காசு கொடுக்க வேண்டும். சில சமயம் ஆட்டத்தில் இல்லாத சிலர் வெளியே பெட்டிங் கட்டுவர். பொதுவாக இது கெட்ட பசங்கள் விளையாடும் விளையாட்டு. படிக்காமல் சும்மா திரியும் பசங்கள் இந்த விளையாட்டை ஒதுக்கு புறமாக விளையாடுவர். கோல்ப், பில்லியர்ட்ஸ், பௌலிங் போன்ற விளையாட்டுகளுக்கு நிகரான ஆட்டம் இது.
3. மொழ்க்: இது ஒரு பம்பர ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஒருவர் பபம்பரத்தை கீழே வைத்து விட வேண்டும். மற்றவர்கள் அவரவரது பம்பரத்தை சுற்றி இந்த கீழே உள்ள பம்பரத்தை நகர்த்தி செல்ல வேண்டும். அதற்கு ஒரு ஆரம்ப இடமும், கடைசி எல்லையும் உண்டு. ரமேஷ் வீட்டில் இருந்து சுரேஷ் வீடு வரைக்கும் என்பது மாதிரி எல்லையை முடிவு செய்து கொள்வர். அது சரி... யார் அவரது பம்பரத்தை கீழே வைத்து மற்றவர் பம்பரத்தால் அடி வாங்க விரும்புவர். அதை முடிவு செய்ய ஆட்ட தொடக்கத்தில் அனைவரும் தங்கள் பம்பரத்தை கீழே சுழற்றி விட்டு அப்பீட் எடுக்க வேண்டும். அப்பீட் என்பது சுழலும் பம்பரத்தை சாட்டையால் சுற்றி மேழே சுண்டி அது பறக்கும் போது பிடிக்க வேண்டும். யார் கடைசியாக அப்பீட் எடுக்கிறார்களோ அவரது பம்பரம் கீழே வைக்க வேண்டும். மற்ற எல்லோரும் அந்த பம்பரத்தை குறி வைத்து குத்தி கொஞ்ச கொஞ்சமாக எல்லையை நோக்கி நகர்த்துவர். இந்த பாவப் பட்ட பம்பரத்துக்கு தப்பிக்க வழி கிடையாதா? உண்டு. யாரவது ஒருவர் ஒரு சுற்றில் இந்த பம்பரத்தை தொட வில்லையெனில் அவரது பம்பரம் கீழே போடப்படும். இந்த பாவப்பட்ட ஆட்டக்காரர் பம்பரம் விடுவிக்கப்படும். பிறகு அந்த இடத்தில இருந்து எல்லோரும் இந்த புதிய பம்பரத்தை நகர்த்த ஆரம்பிப்பர். முதலில் அடி பட்ட ஆட்டக்காரர் தன பம்பரம் மேல் பட்ட அடிக்கெல்லாம் சேர்த்து வேகமாக குத்தி பழி வாங்க ஆரம்பிப்பார். அப்படி எந்த பம்பரம் எல்லையில் சேர்கிறதோ அந்த பம்பரத்திற்கு எல்லா ஆட்டக்காரர்களும் சேர்ந்து மொழ்க் வைப்பர். அது 10 மொழ்க் அல்லது 20 மொழ்க் என ஆட்டத்திற்கு முன்பே முடிவு செய்து வைப்பார். மொழ்க் என்பது ஒரு பம்பரத்தை மற்ற பம்பரத்தின் ஆணியால் ஓங்கி குத்துவது. ஒவ்வொரு ஆட்டக்காரரும் அந்த பரிதாப பம்பரத்திற்கு சமமாக மொழ்க் வைப்பர் . அந்த பம்பரத்தில் பெயிண்ட் போய் சொறி வந்தது போல் ஆகி விடும்.
இது மாதிரி பல விளையாட்டுகள் இன்னமும் இருக்கின்றன. அவைகளை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும்... நீங்களும் ஏதாவது பழைய விளையாட்டுகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்....
Comments