Skip to main content

குட்டி கதை

முன்னொரு காலத்தில் குபேரன் செல்வ செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருந்தார். தன் செல்வ செழிப்பில் மிகுந்த பெருமை கொண்டு, எல்லோரும் தனது புகழை அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் சிவ பெருமானை தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். சிவ பெருமான் குபேரனின் தற்பெருமையை உணர வைக்க ஒரு திருவிளையாடலை புரிய எண்ணினார். எனவே தான் விருந்திற்கு வர முடியாததை எண்ணி வருத்த படுவதாகவும் தனக்கு பதிலாக தனது மூத்த மைந்தன் விநாயகர் விருந்துண்ண குபேரனின் இல்லத்திற்கு வருவார் எனவும் வாக்களித்தார்.

சொன்னது போலவே விநாயகரும் விருந்திற்கு சென்றார். குபேரன் விநாயகரை மிக சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று பல வகை உணவு வகைகளை தயார் செய்து இருந்தார். விநாயகரும் மிக ஆர்வத்துடன் உணவருந்த ஆரம்பித்தார். சிறிது நேரத்திலேயே அனைத்து பதார்த்தங்களையும் விநாயகர் உண்டு முடித்து விட்டு இன்னும் பசிப்பதாக குபேரனிடம் கூறினார். குபேரன் தனது சமையல் காரர்களை அழைத்து மறுபடி அனைத்து பதார்த்தங்களையும் தயார் செய்ய பணித்தார். விநாயகர் இரண்டாவது முறை அனைத்தையும் முடித்து விட்டு மீண்டும் உணவு வருமோ என்பது போல் பார்த்தார். குபேரன் மீண்டும் மீண்டும் உணவு தயார் செய்ய சொல்லி விநாயகருக்கு பரிமாறினார். முடிவில் குபேரனிடம் உள்ள அனைத்து உணவு பண்டங்களும் தீர்ந்தன. ஆயினும் விநாயகரின் பசி குறைந்த பாடில்லை. விநாயகர் பசியால் அவதி படுவது போல நடித்து குபேரரின் விருந்தை குறை கூற ஆரம்பித்தார். குபேரனின் செல்வ மமதை தற்பொழுது முற்றிலுமாக மறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் சிவ பெருமானை நாடி விநாயகரின் பசியை எவ்வாறு போக்குவது என்று கேட்டார். அப்பொழுது சிவ பெருமான் ஒரு பிடி வறுத்த அரிசியை குபேரனிடம் கொடுத்து  விநாயகருக்கு அதை பரிமாறுமாறு கூறினார். குபேரன் மிகுந்த வியப்படைந்து சிவ பெருமானிடம் எப்படி ஒரு பிடி அரிசி விநாயகரின் கோர பசியை அடக்கும் என்று கேட்டார். உடனே சிவபெருமான் குபேரனிடம், அந்த அரிசியை அன்போடும் பரிவோடும் விநாயகருக்கு பரிமாறுமாறு கூறினார். 

அதன்படி குபேரரும் தன இல்லத்திற்கு சென்று அந்த ஒரு பிடி அரிசியை அன்புடனும் கனிவுடனும் விநாயக பெருமானுக்கு பரிமாற விநாயகரின் பசி தீர்ந்ததுடன் குபேரனின் மமதையும் மறைந்தது.

கதையின் நீதி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை....

Comments